குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
Disease, its cause, what may abate the ill: Let leech examine these, then use his skill
அதிகாரம் - 95 - மருந்து
மு.வரதராசன் விளக்கம்
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்யவேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
பரிமேலழகர் விளக்கம்
நோய் நாடி - மருததுவனாயினான் ஆதுரன்மாட்டு நிகழ்கின்ற நோயை அதன் குறிகளான் இன்னது என்று துணிந்து; நோய் முதல் நாடி - பின் அது வருதற் காரணத்தை ஆராய்ந்து; அது தணிக்கும் வாய் நாடி - பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து; வாய்ப்பச் செயல் - அதனைச் செய்யும்வழிப் பிழையாமற் செய்க. (காரணம் : உணவு செயல் என முற்கூறிய இரண்டும். அவற்றை ஆயுள்வேதமுடையார் நிதானம் என்ப. அவை நாடுதற்பயன் - நோயினையும் வாயினையும் ஐயமறத் துணிதல். மருந்து செய்தல், உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் அடங்குதற்கு. 'அது தணிக்கும் வாய்' என்றார். 'கழுவாயும் உள' (புறநா.34) என்றார் பிறரும். பிழையாமை - பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறைமையின் தப்பாமை.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.