மு.வரதராசன் விளக்கம்
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.
பரிமேலழகர் விளக்கம்
அற்றால் அளவறிந்து உண்க - முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அளவு அறிந்து அளவிற்றாக உண்க; உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது - இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றான் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான். (இம்மை மறுமை வீடு பேறுகள் எய்தற்பாலது ஈது ஒன்றுமேயாகலின், 'உடம்பு பெற்றான்' என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்துகொள்ளலாம் ஆகலின், 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார். 'பெற்றால்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.