மு.வரதராசன் விளக்கம்
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
கள் ஒற்றிக் கண் சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். (உள்ளூர் - ஆகுபெயர், 'உண்டு' என்பது அவாய் நிலையான் வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.