குறள் 923:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
The drunkard's joy is sorrow to his mother's eyes; What must it be in presence of the truly wise
அதிகாரம் - 93 - கள்ளுண்ணாமை
மு.வரதராசன் விளக்கம்
பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கள்ளருந்தி மயங்கிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றுச் சான்றோர் முகத்து என்? - ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்?(மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண்அழியும், அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று, ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ?என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?