மு.வரதராசன் விளக்கம்
இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும்,சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரை விட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு. (இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தேயுடைய மனம். கவறு - ஆகுபெயர். ஒத்த குற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. வடநூலாரும் இக்கருத்தான் 'விதனம்' என உடன் கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணைவிராய் எண்ணியவழிப் பன்மைபற்றி முடிபு கோடலின் ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திரு நீக்கப் பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.