மு.வரதராசன் விளக்கம்
பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
பொருட் பொருளார் புன்னலம் - இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை; அருட் பொருள் ஆயும் அறிவினவர் தோயார் - அருளொடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் தீண்டார். (அறம் முதலிய நான்கும் பொருள் எனப்படுதலின், 'பொருட் பொருள்' என விசேடித்தார். புன்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்நலம் மறுதலையாகலின், 'தோயார்' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.