அறத்துப்பால் · குறள் 91 / 1330
10. இனியவைகூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

Sweet are the words that fall from the lips of those who are full of guileless love and truth.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவேஇன்சொல் எனப்படும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

— சாலமன் பாப்பையா