மு.வரதராசன் விளக்கம்
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரிய தாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணி்னையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. ('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துக்கோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.