பொருட்பால் · குறள் 905 / 1330
91. பெண்வழிச்சேறல்

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்.

He who fears his wife fails in his offices to the good and the virtuous.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக்கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார்.'இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக'(சீவக.மண்மகள்.217) என்றார் பிறரும்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

— சாலமன் பாப்பையா