பொருட்பால் · குறள் 903 / 1330
91. பெண்வழிச்சேறல்

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும்.

The cowardice of one who submits to one’s wife makes one shrink from the company of the good.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். (அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.

— சாலமன் பாப்பையா