மு.வரதராசன் விளக்கம்
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன்,சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்று தான் பொருள்.
பரிமேலழகர் விளக்கம்
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.