குறள் 883:
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
Of hidden hate beware, and guard thy life; In troublous time 'twill deeper wound than potter's knife
அதிகாரம் - 89 - உட்பகை
மு.வரதராசன் விளக்கம்
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை மண்பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
உட்பகை அஞ்சித் தற்காக்க - உட்பகையாயினாரை அஞ்சித் தன்னைக் காத்துக்கொண் டொழுகுக; உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும் - அங்ஙனம் ஒழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவி போல, அவர் தப்பாமற் கெடுப்பர். ('காத்தல்' அவர் அணையாமலும் அவர்க்கு உடம்படாமலும் பரிகரித்தல். மண்ணைப் பகுக்கும் கருவி 'மட்பகை' எனப்பட்டது. பகைமை தோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின்,கெடுதல் தப்பாது என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர்.