பொருட்பால் · குறள் 874 / 1330
88. பகைத்திறந்தெரிதல்

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு.

The world is under the sway of one who has the art of converting an enemy into a friend.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்துகொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது பெருமையுள்ளே; தங்கிற்று உலகு - அடங்கிற்று இவ்வுலகு. (வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது. வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல். அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.

— சாலமன் பாப்பையா