மு.வரதராசன் விளக்கம்
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
படைக்கலன்களை உடைய வீரர்களிடம்கூடப் பகை கொள்ளலாம்.ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது.
பரிமேலழகர் விளக்கம்
வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. ('சொல்' ஆகுபெயரான் நீதிநூல் மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று, வந்ததாயினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும், இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.