மு.வரதராசன் விளக்கம்
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப்பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.
பரிமேலழகர் விளக்கம்
வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.