மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மனமாறுபாடு என்னும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.
பரிமேலழகர் விளக்கம்
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும். (தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.