குறள் 849:

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

That man is blind to eyes that will not see who knowledge shows;- The blind man still in his blind fashion knows
அதிகாரம் - 85 - புல்லறிவாண்மை
மு.வரதராசன் விளக்கம்
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு,தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.
பரிமேலழகர் விளக்கம்
காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்:காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்; (புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொள்ளுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.