பொருட்பால் · குறள் 846 / 1330
85. புல்லறிவாண்மை

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி.

What availeth one’s garment if one’s defects lie naked to the world?

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

தமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம். (குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.

— சாலமன் பாப்பையா