பொருட்பால் · குறள் 843 / 1330
85. புல்லறிவாண்மை

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது.

The unwise inflict upon themselves more harm than the enemies can think of.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை - புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம்; செறுவார்க்கும் செய்தல் அரிது - அது செய்தற்குரியராய தம் பகைவர்க்கும் செய்தல் அரிது. (பகைவர் தாம் அறிந்ததொன்றனைக் காலம் பார்த்திருந்துசெய்வதல்லது வறுமை, பழி, பாவம் முதலிய பலவற்றையும்எக்காலத்தும் செய்யமாட்டாமையின், அவர்க்கும் செய்தல்அரிதென்றார். இதனான் அவர் தம் மாட்டும் தீயன செய்தல்அறிவர் என்பது கூறப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.

— சாலமன் பாப்பையா