குறள் 832:

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

'Mid follies chiefest folly is to fix your love On deeds which to your station unbefitting prove
அதிகாரம் - 84 - பேதைமை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது; கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். (இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.