பொருட்பால் · குறள் 822 / 1330
83. கூடாநட்பு

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்.

Inconstant as the heart of a woman is the false friendship of seeming friends.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

உற்றாராக இல்லாமல் உற்றார் போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்' (வளையாபதி புறத்திரட்டு-பேதைமை,18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.

— சாலமன் பாப்பையா