மு.வரதராசன் விளக்கம்
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.
பரிமேலழகர் விளக்கம்
பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலின் தேய்தல் நன்று. ('பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர்.78)என்றார் பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார். இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.