குறள் 803:
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
When to familiar acts men kind response refuse, What fruit from ancient friendship's use
அதிகாரம் - 81 - பழைமை
மு.வரதராசன் விளக்கம்
பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத் தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப் போகும்.
பரிமேலழகர் விளக்கம்
கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை - தாம் உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிற்குத் தாம் செய்தாற் போல உடம்படாராயின்; பழகிய நட்பு எவன் செய்யும் - அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்? (செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?