மு.வரதராசன் விளக்கம்
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்;இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.
பரிமேலழகர் விளக்கம்
அன்பின் வழியது உயிர்நிலை - அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா. (இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்