மு.வரதராசன் விளக்கம்
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும். (நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடிதாம் எனக் கைவீடு எண்ணிச்செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்'. என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.