கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.
பரிமேலழகர் விளக்கம்
நட்பின் செயற்கு அரிய யா உள - நட்புப்போலச் செய்து கோடற்கு அரிய பொருள்கள் யாவை உள? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள - செய்துகொண்டால் அது போலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள?(நட்புச்செய்தற்கு ஆவாரைப் பெறுதலும், பெற்றால்செய்யும் உபாயமும், செய்தால் திரிபின்றி நிற்றலும்முதலிய அரிய ஆகலின். 'நட்பிற் செயற்கு அரியன இல்லை' என்றும், செய்தால் பகைவரஞ்சி வினை தொடங்காராகலின், 'அதுபோல வினைவாராமைக்கு அரிய காவல் இல்லை' என்றும் கூறினார். நட்புத்தான் இயற்கை செயற்கை என இருவகைப்படும்: அவற்றுள் இயற்கை, பிறப்பு முறையானாயதூஉம், தேய முறையானாயதூஉம் என இருவகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாகலின், அது 'சுற்றந்தழாலின்'அடங்கிற்று. ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாகலின், அதுதுணைவலி என 'வலியறிதலுள்' அடங்கிற்று. இனி ஈண்டுச்சொல்லப்படுவது முன்செய்த உதவி பற்றி வருஞ் செயற்கையேயாகலின், அதன் சிறப்பு இதனாற் கூறப்பட்டது.)