பொருட்பால்படைச்செருக்கு(அதிகாரம் 78)

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு.
Fearlessness is a manly virtue; but in distress, mercy is its keen edge.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும்.அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு - அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீாத்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர்.('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை - உபகாரியாம்தன்மை, அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமினாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி (பு.வெ.மா.வஞ்சி 3)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.
— சாலமன் பாப்பையா
குறள் 773 / 1330
திருக்குறள் · thirukural.ai