மு.வரதராசன் விளக்கம்
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காத வரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
என்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை அறக்கடவுள். ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.