பொருட்பால் · குறள் 765 / 1330
77. படைமாட்சி

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை.

A valiant army faces courageously the advancing foe even when led by the God of Death.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

கூற்று உடன்று மேல் வரினும் - கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும்; கூடி எதிர்நிற்கும ஆற்றலதுவே படை- நெஞ்சு ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படையாவது. ('மருந்தில் கூற்று' ஆகலின், (புற.நா.3) உம்மை சிறப்பும்மை. மிகப்பலர் நெஞ்சொத்தற்குக் காரணம் அரசன்மேல் அன்பு. ஆற்றல் - மனவலி.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.

— சாலமன் பாப்பையா