மு.வரதராசன் விளக்கம்
எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம் - எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? நாகம் உயிர்ப்பக் கெடும் - அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும். (உவமைச்சொல் தொக்கு நின்றது. இத்தொழில் உவமத்தால் திரட்சி பெற்றாம். வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அதற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனை ஆள்தல் நன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் முறையே அரசனுக்குப் படை ஏனையங்கங்களுள் சிறந்தது என்பதூஉம், அதுதன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதூஉம் அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதூஉம் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.