குறள் 760:
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
Who plenteous store of glorious wealth have gained, By them the other two are easily obtained
அதிகாரம் - 76 - பொருள்செயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு - நெறியான் வரும் பொருளை இறப்ப மிகப் படைத்தாரக்கு; ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள் - மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம். (காழ்த்தல்: முதிர்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின், 'ஒண்பொருள்' என்றும், ஏனை இரண்டும் அதன் விளைவாகலின் தாமே ஒருகாலத்திலே உளவாம் என்பார் 'எண்பொருள்' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும்.