மு.வரதராசன் விளக்கம்
அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
அன்பு ஈன் அருள் என்னும் குழவி - அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு - பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும். (தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவதாகலின், அதனை 'அன்பு ஈன் குழவி' என்றும், அது வறியார்மேற் செல்வது அவ்வறுமை களையவல்லார்க்காதலின் பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலிற் செல்வச் செவிலி என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.