கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளேயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.
பரிமேலழகர் விளக்கம்
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி - போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று; மாண்டது அரண் - மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது. (தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப்பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல், என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். 'மற்றும் வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல் போதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை.)