மு.வரதராசன் விளக்கம்
காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
சிறுகாப்பின் பேர் இடத்தது ஆகி - காக்க வேண்டும் இடம் சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம் அழிப்பது அரண் - தன்னை வந்து முற்றிய பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது. (வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றி 'சிறுகாப்பின்' என்றும்,அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, 'பேரிடத்தது ஆகி' என்றும், தன் வலி நோக்கி 'இது பொழுதே அழித்தும்' என்று வரும் பகைவர் வநது கண்டால், அவ்வூக்கமொழிதல் பற்றி, 'ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.