குறள் 738:
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
A country's jewels are these five: unfailing health, Fertility, and joy, a sure defence, and wealth
அதிகாரம் - 74 - நாடு
மு.வரதராசன் விளக்கம்
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம்,இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ் ஐந்து - நோயின்மையும் செல்வம் விளைதல் இன்பம் காவல் என்றிவை உடைமையுமாகிய இவ்வைந்தனையும்; நாட்டிற்கு அணி என்ப- நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர். (பிணியின்மை, நில நலத்தான் வருவது. செல்வம், மேற்சொல்லியன. இன்பம், விழவும் வேள்வியும் சான்றோரும் உடைமையானும், நுகர்வன உடைமையானும்,நில நீர்களது நன்மையானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது. 'காவல்' எனவே, அரசன் காவலும், வாழ்வோர் காவலும் அரண் காவலும் அடங்கின. பிற தேயங்களினுள்ளாரும் விழைந்து பின் அவையுள்ளாமைக்கு ஏதுவாய அதன் அழகு இதனாற் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.