குறள் 733:
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.
When burthens press, it bears; Yet, With unfailing hand To king due tribute pays: that is the 'land'
அதிகாரம் - 74 - நாடு
மு.வரதராசன் விளக்கம்
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
புதிய சுமைகள் ஒன்றுதிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. (பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத்தொகுதியும், தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல், அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.