குறள் 721:
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
Men, pure in heart, who know of words the varied force, The mighty council's moods discern, nor fail in their discourse
அதிகாரம் - 73 - அவையஞ்சாமை
மு.வரதராசன் விளக்கம்
சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
வகை அறிந்து வல்லவை வாய் சோரார் - கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படச் சொல்லார்; சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் தொகையெல்லாம் அறிந்த தூய்மையினை உடையார். (இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது. 'வல்லவை' என்பதற்கு, தாம் 'கற்றுவல்ல நூற்பொருள்களை' என்று உரைப்பாரும் உளர். 'அச்சத்தான்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'சொல்லின் தொகை' 'தூய்மை' என்பவற்றிற்கு (குறள் 711) மேல் உரைத்தாங்கு உரைக்க.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.