மு.வரதராசன் விளக்கம்
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன்,வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான். (தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.