மு.வரதராசன் விளக்கம்
இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - வினை செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல் - அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க. (இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின். இயலா இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும். அவ்விரண்டு காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார். அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின், இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.