அறத்துப்பால் · குறள் 67 / 1330
7. புதல்வரைப் பெறுதல்

தந்தை மகற்காற்று நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்.

The good a father can do his son is to make him occupy the first rank in an assembly.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை
அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

— சாலமன் பாப்பையா