மு.வரதராசன் விளக்கம்
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக. (சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர், அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.