மு.வரதராசன் விளக்கம்
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.
பரிமேலழகர் விளக்கம்
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும். (மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும், தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவன் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல்.அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை'எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வர்ஆகலின், அவற்றான் வருவன. விழுமம் : சாதிப்பெயர். இவைஇரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.