மு.வரதராசன் விளக்கம்
பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.
பரிமேலழகர் விளக்கம்
எற்று என்று இரங்குவ செய்யற்க - யான் செய்தது எத்தன்மைத்து என்று பின் தானே இரங்கும் வினைகளை ஒருகாலும் செய்யாதொழிக; செய்வானேல் மற்று அன்ன செய்யாமை நன்று - அன்றி ஒருகால் மயங்கி அவற்றைச் செய்யும் தன்மையனாயினான் ஆயின், பின் இருந்து அவ்விரங்கல்களைச் செய்யாதொழிதல் நன்று. ('இரங்குவ' என முன் வந்தமையின், பின் 'அன்ன' வெனச் சுட்டி ஒழிந்தார். அவ்வினைகளது பன்மையான் இரக்கமும் பலவாயின. அச்செயற்குப் பின்னிருந்து இரங்குவனாயின், அது தீரும் வாயில் அறிந்திலன் எனவும், திட்பமிலன் எனவும் பயனல்லன செய்கின்றான் எனவும், தன்பழியைத் தானே தூற்றுகின்றான் எனவும் எல்லாரும் இகழ்தலின், 'பின் இரங்காமை நன்று' என்றார்.இதுவும் வினைத்தூயார் செயலாகலின்,உடன் கூறப்பட்டது. 'பின் தொடர்தற்குச் செய்வானாயின், அவை போல்வனவும் செய்யாமை நன்று' எனப் பிறரெல்லாம் இயைபு அற உரைத்தார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.