பொருட்பால் · குறள் 653 / 1330
66. வினைத்தூய்மை

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினைஆஅதும் என்னு மவர்.

Those who wish to become great must always avoid deeds which darken the lustre of their reputation.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

ஆதும் என்னும் அவர் - மேலாகக்கடவோம் என்று கருதுவார்; ஒளி மாழ்கும் வினை செய் ஓஒதல் வேண்டும் - தம் ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க. ('ஓஒதல்வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து. ஓவுதல் என்பது குறைந்து நின்றது. ஒளி - தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல். 'செய்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத் தொகையாக்கியவழிப் பொருளின்மை அறிக. ஒளிகெட வருவது ஆக்கம் அன்று என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

— சாலமன் பாப்பையா