மு.வரதராசன் விளக்கம்
பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துகளைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.
பரிமேலழகர் விளக்கம்
வேட்பத் தாம் சொல்லிப் பிறர் சொற்பயன் கோடல் - பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு. (பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதி இன்மையின், இதுவும் உடன் கூறினார். இவை மூன்று பாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.