மு.வரதராசன் விளக்கம்
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
நாநலம் என்னும் நலன் உடைமை - அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று - அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான். ('நாவால் உளதாய நலம்' என விரியும். 'இந்நலம் உலகத்தைத் தம் வயத்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும் நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியாமையாததாயபின், அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.