மு.வரதராசன் விளக்கம்
பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பிரித்தலும் - வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (இவற்றுள் அப்பொழுதை நிலைக்கு ஏற்ற செயலறிதலும், அதனை அவர் அறியாமல் ஏற்ற உபாயத்தால் கடைப்பிடித்தலும் அரியவாதல் நோக்கி, 'வல்லது' என்றார். வடநூலார், இவற்றுள் பொருத்தலைச் 'சந்தி' என்றும் பிரித்தலை 'விக்கிரகம்' என்றும் கூறுப.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.