மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு,அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.
பரிமேலழகர் விளக்கம்
இன்னாமை இன்பம் எனக்கொளின் - ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய உயர்ச்சி உண்டாம். (துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின், அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கு அழிவுஇன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தே விடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.