மு.வரதராசன் விளக்கம்
ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க - மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை அரசன் பிறர் அறியச் செய்யாதொழிக; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும் - செய்தானாயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டான் ஆம். (மறையாவது அவன் ஒற்றனாயதூஉம் அவன் கூறியதூஉம் ஆம். சிறப்புப் பெற்ற இவன் யாவன் என்றும், இது பெறுதற்குக் காரணம் யாது என்றும் வினவுவாரும் இறுப்பாரும் அயலாராகலின், 'புறப்படுத்தானாகும்' என்றார். இவை மூன்று பாட்டானும் ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தன அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.