மு.வரதராசன் விளக்கம்
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்குப் பக்க பலமாக்கிக் கொள்ளும், அதைப்போல் பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.
பரிமேலழகர் விளக்கம்
கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும் - கடுங்கோலனாய அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும், அது அல்லது நிலக்குப் பொறை இல்லை - அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை. ('கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு ஆகலின், நிலத்திற்குப் 'பொறைஅது அல்லது இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள் விகாரம். இதனான் வெருவந்தசெய்தலின் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.